சர்வதேச கோள்மண்டல தினம்
உலகில் அறியப்பட்ட மிகப் பழமையான விஞ்ஞானங்களில் ஒன்று வானியல் ஆகும். விண்மீன்கள் நிறைந்த வானத்தின் மீது மனிதனுக்கு இருந்த ஈர்ப்பும், அதைப் புரிந்துகொள்வதற்கு அவனுக்கு இருந்த ஆர்வமும் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.பழங்காலத்திலிருந்தே, வானம் மனித குலத்திற்கு நேரத்தைச் சொல்லும் கடிகாரமாகவும், திகதியினை அறிந்து கொள்வதற்குதவும் நாட்காட்டியாகவும், திசையைக் கண்டறிய ஒரு திசைகாட்டியாகவும் பயன்படுத்தப்பட்டது. இவை அனைத்தையும் தவிர, விதைகளை விதைப்பதற்கும் அறுவடை செய்வதற்கும் பொருத்தமான நேரத்தை தீர்மானிக்கவும், ஜோதிடத்தின் அடிப்படையில் எதிர்காலத்தை கணிக்கவும் மனிதனுக்கு வானம் பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.
வானத்தைப் பற்றி மனிதன் சேகரித்த பரந்த அறிவை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்குக் கொடுப்பதற்கு மொழி மட்டும் போதுமானதாக இல்லை. இந்த நோக்கத்திற்காக வரைபடங்களும் பயன்படுத்தப்பட்டன என்பதற்கு குகைகளுக்குள் வரையப்பட்டுள்ள ஓவியங்களும் ஆதாரமாக இருக்கின்றன. இது தவிர, மனிதன், நட்சத்திர வடிவங்களை சித்தரிக்க பல்வேறு வேறுபட்ட முறைகளைப் பயன்படுத்தி உள்ளான் . கூடாரத்தின் கூரைக்கு பயன்படுத்தப்படும் துணியில் துளைகளை உருவாக்குவதன் மூலம் நட்சத்திர வடிவங்களை பிரதிநிதித்துவப்படுத்துவது அத்தகைய முறைகளில் ஒன்றாகும் என்பதுடன் இம்முறையின் ஊடாக பகல் பொழுதுகளில் கூட இரவு வானத்தைப் பற்றிய அறிவை மற்றவர்களுக்கு வழங்க முடிகிறது .
செயற்கையான வானத்தைக் காண்பிக்கும் கோள் மண்டலத்தினை உருவாக்குவது யாருடைய எண்ணமாக இருந்த போதிலும் , 1923ஆம் ஆண்டு அக்டோபரில் ஜெர்மனியின் ஜென்னாவில் உலகின் முதல் கோள் மண்டல எறியம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் வானமானது பூமிக்கு அண்மித்ததாக வந்தது. 1925 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி, ஜெர்மனியின் முனிச் எனுமிடத்தில் , Deutsches அருங்காட்சியகம் திறக்கப்பட்டதன் மூலம் உலகின் முதல் கோள் மண்டலம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.
கோள் மண்டலம் அமைக்கப்பட்ட ஆரம்ப கட்டங்களில் சூரியன், சந்திரன் மற்றும் விண்மீன்கள் காட்டப்படுதலானது மட்டுப்படுத்தப்பட்டிருந்தது . ஆனால் காலப்போக்கில், விண்கற்கள், வால் நட்சத்திரங்கள், சூரியக் குடும்பம், பால்வீதி மற்றும் ஆழமான வானப் பொருட்களைக் காண்பிக்கும் அளவுக்கு இந்த கோள் மண்டலம் படிப்படியாக வளர்ச்சியடைந்தது. மேலும், நட்சத்திர எறியங்களினை தவிர, பல் ஊடக எறியங்கள் , முப்பரிமாண எறியங்கள் மற்றும் பல் பரிமாண எறியங்கள் என்பன காலப்போக்கில் கோள் மண்டலத்தின் எறியங்களின் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இன்றைய அடிப்படையில் நோக்குமிடத்து, கோள் மண்டலமானது எம்மை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் நுழைவாயில்களாக செயல்படும் அதே வேளையில், பிரபஞ்சத்தின் ரகசியங்களைக் கண்டறியும் முயற்சியில் பல்வேறு கட்புல அடிப்படையிலான காட்சி அனுபவங்கள் மூலம் நம் மனதில் ஒரு முத்திரையை விட்டுச் செல்கின்றன. 1923 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை நோக்கின், கோள் மண்டலமானது எதிர்பாராத அளவுக்கு சிறந்த முறையில் மாறிவிட்டது என்பதுடன் இப்போது முழு பிரபஞ்சத்தையும் யதார்த்தமான முறையில் இதன் மூலம் எம்மால் காட்ட முடிகிறது. . உங்கள் சொந்த விண்கலத்தில் ஏறி ,மற்ற பிரபஞ்சங்களில் உள்ள கிரகங்கள் மற்றும் பிரபஞ்சத்தின் மற்ற அற்புதமான இடங்களில் தரையிறங்கி செல்லுதல் என்ற தனித்துவமான அனுபவத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.
தற்போது உலகில் உள்ள கோள் மண்டலங்களின் எண்ணிக்கையானது 4000 இணை தாண்டியுள்ளது. இன்றைய கோள் மண்டலங்களாவன,அவற்றின் முதன்மை நோக்கங்களுக்கு அப்பால் சென்று , கல்வி, அறிவியல், கலாச்சாரம், கலை மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை இணைத்து உலகளாவிய ரீதியில் கட்புல ,செவிப்புல காட்சி அனுபவத்தை வழங்கும் மையங்களாகச் செயல்படுகின்றன.
இலங்கை கோள் மண்டலமானது கொழும்பு 07 இல் உள்ள ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தையில் அமைந்துள்ளது. இது 1965 ஆம் ஆண்டு தொழில்துறை கண்காட்சியை நடத்துவதற்கு இணையாக வான பொருட்களை அவதானிப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு கண்காணிப்பு நிலையமாக கலாநிதி ஏ.என்.எஸ்.குலசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டது. இலங்கையில் உள்ள இந்த ஒரே ஒரு கோள் மண்டலமானது உலகிலேயே மிகப்பெரிய ஒன்றாகும். இலங்கை கோள் மண்டலமானது , திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கஇராஜாங்க அமைச்சின் கீழ் ஒரு பிரிவாக செயற்படுகிறது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், உயர்கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் முப்படைகளின் அதிகாரிகளை உள்ளடக்கிய பொது மக்கள் குழாமிற்கு வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் தொடர்பான அறிவை வழங்கும் நோக்கில் தினசரி அடிப்படையில் மும்மொழிகளிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
உலகெங்கிலும் உள்ள கோள் மண்டலங்களாவன, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வார இறுதியில் சர்வதேச கோள் மண்டலங்களின் தினத்தைக் கொண்டாடுகின்றன. சர்வதேச கோள் மண்டல தினம் கொண்டாடப்படுவதன் நோக்கமானது , கோள் மண்டலம் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வான கண்காணிப்புகளைத் தடுக்கும் ஒளி மாசுபாட்டின் பிரச்சனையைப் பற்றி அவர்களுக்குக் அறியச் செய்தல் மற்றும் பல்வேறு நாடுகளின் கோள் மண்டலங்களுக்கிடையே ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச பரிமாற்றங்களை வளர்த்தல் என்பனவாகும்.
சர்வதேச கோள்மண்டல தினத்தை கொண்டாடும் நோக்கில் இலங்கை கோள் மண்டலமானது மார்ச் மாதம் 12 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மார்ச் மாதம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 06.00 மணி வரை சிறப்பு கோள் மண்டல நிகழ்ச்சிகளையும் மற்றும் இரவு வான் கண்காணிப்பு முகாம்களையும் ஏற்பாடு செய்துள்ளது